சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் ஏற்படும் திடீர் மின்வெட்டு பொதுமக்களின் தூக்கத்தைக் கெடுத்து, பெரும் அவதிக்குள்ளாக்கி வருகிறது. நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவதால் ஏசி மற்றும் ஃபேன்கள் நின்றுவிடுகின்றன.
இதனால் ஏற்படும் கடுமையான புழுக்கம் மற்றும் கொசுக்கடி தாங்காமல், பெற்றோர் தங்களின் சின்னஞ்சிறு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு நடுத்தெருவிற்கு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இன்வெர்ட்டர் வைத்திருப்பவர்களுக்கும் நீண்ட நேர மின்வெட்டால் சார்ஜ் தீர்ந்துபோய், இரவு முழுக்க இருட்டிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய ஆட்சியில் இப்படி ஒரு மர்மமான மின்வெட்டா என்று மக்கள் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், இதற்கு மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், மின்துறை கடந்த 20 ஆண்டுகளாக சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த இக்கட்டான சூழலிலும் துறையைச் சீரமைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் அதிகப்படியான மின் அழுத்தம் மற்றும் பழமையான நிலத்தடி கேபிள்கள் பழுதாவதுமே இந்த இரவு நேர மின்வெட்டுக்கு முக்கியக் காரணம் என்பதை ஒப்புக்கொண்டார்.
அதே நேரத்தில், மின்சாரத் துறையைத் தனியார் வசம் ஒப்படைக்கும் எண்ணம் அரசுக்கு துளியும் இல்லை என்றும், “இது மக்களின் சொத்து” என்றும் அவர் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். மின்வெட்டு விவகாரத்தில் அதிகாரிகளின் அலட்சியம் அல்லது குளறுபடி ஏதேனும் இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த அமைச்சர், சென்னையில் ஏற்படும் மின்தடைகளை உடனுக்குடன் சரி செய்ய 7 சிறப்புப் பொறியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த குழுக்கள் மின் கம்பிகள் பழுதாகும் இடங்களை உடனடியாகக் கண்டறிந்து சீரமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள். மின்துறையில் ஏற்கனவே பெரிய அளவிலான சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பணிகளையும் விரைந்து முடித்து, அடுத்த 40 ஆண்டுகளுக்குத் தமிழகத்திற்குத் தடையற்ற மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அமைச்சர் பொதுமக்களுக்குப் “பவர்”ஃபுல் வாக்குறுதி அளித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களின் மின்சாரப் புகார்களைத் தெரிவிக்க மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டு மையம் மற்றும் கால் சென்டரை நேரடியாகத் தொடர்பு கொள்ள 94987 94987 என்ற எண்ணையும், 24 மணி நேர இலவச உதவி எண்ணான 1912-ஐயும் அமைச்சர் வெளியிட்டுள்ளார். துணை மின் நிலையங்களில் உள்ள ஊழியர்கள் புகார்களைப் எடுக்கவில்லை என்றாலோ அல்லது வேறு வேலைகளில் மும்முரமாக இருந்தாலோ, உடனடியாக இந்த எண்களை அழைக்கலாம் என்றும், புகார்கள் மீது உடனடியாக ஆக்ஷன் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அமைச்சரின் இந்த அதிரடி வாக்குறுதிகள் சென்னை மக்களுக்குப் தற்காலிக ஆறுதலைத் தந்திருந்தாலும், இந்த நள்ளிரவு மின்வெட்டுத் துயரத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நீடிக்கிறது.
