நடப்பு IPL தொடர் இன்னும் இரண்டு தினங்களில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. அஜிங்கியா ரஹானே, ரஜத் படிதார் என இரண்டு கேப்டன்களுமே புதியவர்கள் என்பதால், இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப் படுகிறது.
தொடர்ந்து 23ம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 2வது ஆட்டத்தில், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இந்த தொடரின் ஒரே வெளிநாட்டு கேப்டனாக பேட் கம்மின்ஸ் இருக்கிறார். எனவே தன்னுடைய கேப்டன்சியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. இந்தநிலையில் ராஜஸ்தான் ராயல்ஸை முதல் 3 போட்டிகளுக்கு அந்த அணியின் இளம்வீரர் ரியான் பராக், வழிநடத்த உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
T20 தொடரின்போது சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து இன்னும் அவர் மீளவில்லை. இதனால் விக்கெட் கீப்பராகவும் செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆரம்ப போட்டிகளில் Impact பிளேயராக சாம்சனை விளையாட வைக்க, அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.
இதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், BCCI தடை காரணமாக முதல் போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை கேப்டனாக சூர்யகுமார் யாதவ், அணியை வழிநடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.