Sunday, June 22, 2025

அதெல்லாம் ‘முடியாது’ அடம்பிடித்த RCB.. 11 பேர் பலி ‘அதிர்ச்சி’ பின்னணி..

முதன்முறையாக IPL கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால், அந்த மகிழ்ச்சியை முழுமையாகக் கொண்டாட முடியாமல் போய்விட்டது. 18 வருடங்கள் கழித்து RCB அணி கோப்பையை கையில் ஏந்தியது.

இதையடுத்து அவர்களின் சொந்த மைதானமான சின்னச்சாமியில், பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவை கர்நாடக அரசும் முன்னின்று நடத்தியது. வீரர்களை நேரில் பார்க்கும் ஆர்வத்தில், லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே குவிந்து விட்டனர்.

உள்ளே பாராட்டுவிழா நடைபெற்றபோது வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இந்த துயர சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என, BCCI துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கர்நாடகா கிரிக்கெட் சங்கம், பெங்களூரு அணியுடன் இணைந்து உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் அளிப்பதாகக் கூறியுள்ளது. அரசு தரப்பில் ரூபாய் 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 11 உயிர்கள் பலியானதற்கு RCB அணியே முக்கிய காரணம் என்று, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வெற்றிவிழாவை உடனே நடத்த வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை வைத்து கொள்ளுங்கள் என்று காவல்துறை பெங்களூரு நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அணி நிர்வாகமோ அதுவரை வெளிநாட்டு வீரர்கள் இருக்க மாட்டார்கள்.

வெற்றிவிழாவை உடனே நடத்துவது தான் சரியாக இருக்கும் என்று காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாம். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், ” ரசிகர்கள் உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றனர். இப்போது வெற்றிவிழா நடத்த வேண்டாம்.

ஒருவேளை வெற்றிவிழாவை நடத்தினாலும் வீரர்களை நேரடியாக மைதானத்துக்கு அழைத்து வந்து நடத்துங்கள். இல்லையெனில் ஞாயிற்றுக்கிழமை வைத்துக் கொள்ளுங்கள் என்று அரசிடமும், பெங்களூரு அணியிடமும் கேட்டுக் கொண்டோம்.

அது நடக்கவில்லை. இதுபோன்ற ரசிக வெறியை நாங்கள் எங்கும் பார்த்ததில்லை. போட்டி நடந்த அன்று காலை 5.30 மணி வரை தெருக்களில் நின்று, நாங்கள் சோர்வடைந்து விட்டோம். எல்லாம் கையை மீறிப்போய் விட்டது, ” என்று தெரிவித்து இருக்கிறார்.

பொதுவாக இதுபோன்ற வெற்றிவிழா பேரணிகள், 2 நாட்கள் கழித்துத்தான் நடத்தப்படும். ஆனால் RCB அணி தங்களின் நலனை கருத்தில் கொண்டு, உடனே விழாவை நடத்தியது தான் இவ்வளவு சோகத்திற்கும் காரணமாகி விட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news