Thursday, April 24, 2025

வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள்! அமைச்சர் சொன்ன அட்டகாசமான தகவல்!

“என்னதான் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைத்தாலும் அவற்றை சென்று வாங்குவதற்குள் சிலருக்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது. இதற்கு நியாயமான பல காரணங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில் எந்த ஆட்சி அமைந்தாலுமே பொது விநியோகத் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் நடைமுறை பற்றி பிற மாநிலங்களில் ஆய்வு செய்யப்படவிருப்பதாகவும் விரைவில் இந்த திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது நாகர்கோயில் எம்எல்ஏ காந்தி, “ஏழை தொழிலாளர்கள் காலையில் வேலைக்கு சென்று மாலையில் தான் வீடு திரும்புகிறார்கள். மேலும் வயது முதிர்ந்தவர்களும் ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதால் வாகனங்கள் மூலம் ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்தை கொண்டு வர முடியுமா?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, “ரேஷன் கடைகள் மாதம் முழுவதும் திறந்து இருக்கின்றன. அதனால் எப்போது வேண்டுமானாலும் மக்கள் பொருட்களை வாங்கிச் செல்லலாம். மேலும் ஏதாவது ஒரு இடத்தை குறிப்பிட்டால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அது மட்டுமல்லாமல் “வேலைக்குச் சென்று விட்டு இரவு தாமதமாக வீடு திரும்பும் மக்கள் பயன்பெறும் வகையில் கர்நாடகா மாநிலத்தில் ஆங்காங்கே பெரிய மளிகை கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்கும் போது ரேஷன் பொருட்கள் வழங்கும் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுமா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு

“ஆந்திராவில் இதே போல வீடுகளுக்கே சென்று பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இருபதாம் தேதி உணவுத்துறை அதிகாரிகள் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களுக்கு சென்று ரேஷன் கடைகள் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த இருக்கிறார்கள். அவர்கள் வந்து அறிக்கை தந்த பின்னர் அதனை ஆய்வு செய்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு முடிவெடுக்கப்படும்” என அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார்.

Latest news