முன்னாள் முதல்வர் கருணாநிதியின் காலத்திலிருந்து திமுகவின் வலிமையான தூணாகவும், மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் விளங்கி வரும் துரைமுருகன், கடந்த பல வருடங்களாக கட்சியின் அன்றாட நிர்வாகத்தை திறம்பட கையாண்டு வந்தவர். இருப்பினும், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தொடர் கட்சிப் பணிகளை முழுமையாக கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் பிரசாரம், மாவட்ட அளவிலான கூட்டங்கள் மற்றும் அலுவலக நிர்வாகப் பொறுப்புகளை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகி ஓய்வு எடுக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
துரைமுருகனின் ராஜினாமா யோசனைக்கு பின்னால் ஒரு முக்கிய நிபந்தனை இருப்பதாக அறிவாலய தரப்பில் பேசப்படுகிறது. தனக்கு பதிலாக கட்சியின் தற்போதைய பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலுவை பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என அவர் மு.க.ஸ்டாலினிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.எனினும், தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த முக்கியப் பொறுப்புக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அரசியல் வட்டாரங்களின்படி, தற்போது மூன்று மூத்த தலைவர்களின் பெயர்கள் ஸ்டாலினின் பரிசீலனைப் பட்டியலில் உள்ளன முதலாவதாக டி.ஆர். பாலு பெயரும்,இரண்டாவதாக ஆ. ராசா பெயரும்,மூன்றாவதாக கே.என். நேரு பெயரும் அடிப்பட்டு வருவாதாக சொல்லப்படுகிறது.இறுதி முடிவு மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமையும். சில வாரங்களில் இந்த அதிரடி மாற்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
