பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் உணவுகள், எண்ணெய் ஆகியவற்றை பேக்கிங் செய்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் பிரபல யோகா குரு பாபா ராம்தேவ்வின் நிறுவனம் ஆகும். இவருடைய புகைப்படத்துடன்தான் இந்த நிறுவனங்களின் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான மிளகாய் பொடியின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. விதிகளை பின்பற்றாமல் தயாரிக்கப்பட்ட மிளகாய் பொடி பாக்கெட்டுகளை திரும்பப் பெற்றுக்கொள்ள பதஞ்சலி நிறுவனத்திற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் பதஞ்சலி நிறுவனம் சுமார் 4 டன்கள் அளவிலான 200 கிராம் மிளகாய் பொடி பாக்கெட்டுகளை விற்பனை நிலையங்களில் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.