6 மகள்களையும் டாக்டர் ஆக்கிய பெற்றோர்

303
Advertisement

தம் மகள்கள் 6 பேரையும் எம்பிபிஎஸ் படிக்க வைத்து தலைநிமிர்ந்துள்ளனர் கேரளப் பெற்றோர்.

மலப்புரம் மாவட்டம், நடுப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் டிவிபி அஹமது குஞ்ஜமாத்- ஸைனா தம்பதி. இவர்களுக்கு ஃபாத்திமா, ஹஜிரா, ஆயிஷா, ஃபாஷியா, ரஹ்னாஸ், அமீரா என 6 மகள்கள். இவர்கள் ஆறுபேரும் தற்போது எம்பிபிஎஸ் பயின்று பெற்றோரைத் தலைநிமிரச் செய்துள்ளனர்.

ஸைனாவுக்கு 12 வயதாகும்போது அவரது உறவினரான டிவிபி அஹமது குஞ்சமாத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவரது கணவர் சென்னையில் வியாபாரம் செய்துவந்துள்ளார்.

முதல் குழந்தை பிறந்ததும் கத்தார் நாட்டில் பெட்ரோலியம் நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்ததால் அந்நாட்டுக்குச் சென்றுவிட்டார் அஹமது. அங்கேயே குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டனர். திருமணமான புதிதில் தனது மனைவியிடம் உலகின் வெவ்வேறு இடங்களைப் பற்றியும் அவற்றின் சிறப்புகளைப் பற்றியும் கதைகதையாகச் சொல்வாராம் அஹமது.

தனது திருமண வாழ்க்கை பற்றி மகிழ்ச்சியோடு விவரிக்கிறார் அந்த சாதனைத் தாய்.
”ஒருநாள் நான் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியதும் என் பெற்றோர் ‘உனக்கு உடனே திருமணம் செய்யப் போகிறோம்’ என்றனர். அடுத்த நாளே திருமணமும் நடந்தது. இளம்வயதிலேயே திருமணம் நடைபெற்ற காலமது.

நான் 5ஆவது வரை பயிலும்போது கல்வி கற்பதில் மிகுந்த அக்கறையோடு இருந்தேன். அதனால் வகுப்பாசிரியர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும். ஆனால், அதன்பிறகு தொடர்ந்து பயிலமுடியாமல் போனது. என்றாலும், தொடர்ந்து பயில் என்னை யாரும் ஊக்கப்படுத்தவில்லை.

அதனால், எனக்குத் திருமணம் நடந்த உடனே கணவரிடம், ”நான் கல்வி கற்க வேண்டும்” வலியுறுத்தினேன். என்னைத் தேற்றிய அவர் நான் கல்விபயில ஊக்கமளித்தார். அத்தோடு, ”நாமிருவரும் சேர்ந்து நமது மகள்களை நன்கு படிக்க வைப்போம்” என்று கூறினார்.
எங்களுக்கு 6 மகள்கள் இருப்பது பற்றி ஒருநாளும் நாங்கள் கவலைப்பட்டதில்லை.
ஆனால்,எங்கள் சொந்த ஊரில் இருந்தபோதெல்லாம் ஊர்க்காரர்கள் எங்கள் 6 மகள்களின் எதிர்காலம் பற்றியே விசாரிப்பார்கள்.

எங்களுக்கு ஆறும் பெண் குழந்தைகள் என்பதைப் பற்றியோ, அவர்களை வளர்ப்பது பற்றியோ ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை. அவர்களை ஒரு சுமையாக ஒருபோதும் கருதியதில்லை.

என்னுடைய குழந்தைகள் நல்ல கல்வி பெறவேண்டும், வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எங்கள் குழந்தைகளுக்கு பொது அறிவு தொடர்பான நிறைய புத்தகங்களை என் கணவர் வாங்கிவருவார்” என்கிறார் படிக்காத மேதையான தாய்.

”நாங்கள் அனைவரும் நன்றாகப் பயில வேண்டுமென அம்மா ஊக்கப்படுத்தினார். அப்பாவோ பத்தாம் வகுப்புக்குப் பின்னர் அடுத்து என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என அடிக்கடி கேட்பார். நாங்கள் அனைவரும் டாக்டருக்குப் பயில்வோம் எனக் கூறுவதையே பழக்கமாகக் கொண்டிருந்தோம்” என்கின்றனர் மகள்கள்.

35 ஆண்டுகள் கத்தார் நாட்டில் வேலைசெய்துவந்த அஹமது தனது சொந்த மாநிலத்துக்குத் திரும்பிய அஹமது இரண்டாண்டுகளுக்குமுன்பு மாரடைப்பால் காலமாகிவிட்டார். ஆனாலும் சோர்ந்துவிடாமல் மற்ற மகள்களையும் மருத்துவம் பயில வைத்து வருகிறார் 5ஆவது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள தாய் ஸைனா அஹமது.

அதன் எதிரொலியாக மகள்கள் 6பேரும் தற்போது எம்பிபிஸ் மருத்துவர்களாகியுள்ளனர். முதல் 4 மகள்களும் டாக்டர் ஆகிவிட்ட நிலையில், ஐந்தாவது மகள் சென்னையில் இறுதியாண்டும், ஆறாவது மகள் மங்களூருவில் எம்பிபிஎஸ் முதலாமாண்டும் பயின்று வருகின்றனர்.

முதல் நான்கு மகள்களுக்கும் மணமாகிவிட்டது. அவர்களின் கணவர்களும் மருத்துவர்கள்தாம்.

பெண்களைப் பட்டம்பெறும் வரை படிக்க வைப்பதே பல பெற்றோருக்கு சவாலான விஷயமாக உள்ள நிலையில், மகள்கள் அனைவரையும் மருத்துவம் பயில வைத்து தலைசிறந்த பெற்றோராகியுள்ளனர் கேரளத் தம்பதி.

டிகிரி வரை படிக்க வைத்தால் போதும். அவர்களாகவே வேலை தேடிக்கொள்வார் என்கிற மனநிலையில் பல பெற்றோர் இருக்க, ஒட்டுமொத்த சமுதாயமே திரும்பிப் பார்க்கும் வகையில் தன் மகள்கள் அறுவரையும் மருத்துவர்களாக்கி சாதனை புரிந்துள்ளனர் அகமது குட்டி- ஸைனா அஹமது தம்பதியினர்,

மகள்களைப் பெற்ற பெற்றோருக்குத்தாம் தெரியும் மகள்கள் அனைவரும் மாணிக்கங்கள் என்று.

மகள்கள் அனைவரையும் மருத்துவர்களாக்கி அழகுபார்த்து சாதனைபுரிந்துள்ள இந்தப் பெற்றோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.