ஈரான் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் தாக்கமாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலைகள் அதிகரித்து, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் விமான எரிபொருளின் விலையும் தொடர்ந்து உயர்ந்து, விமான சேவை நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்த சூழலில், எரிபொருள் செலவு கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், தனது உள்நாட்டு விமான சேவைகளை 20 முதல் 22 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சர்வதேச விமான சேவைகளை 27 சதவீதம் வரை குறைத்திருந்த நிலையில், தற்போது உள்நாட்டு சேவைகளிலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
ஏர் இந்தியா வாரத்திற்கு சுமார் 4,400 விமான சேவைகளை இயக்கி வருகிறது. இதில் 3,600 விமானங்கள் உள்நாட்டிலும், 800 விமானங்கள் சர்வதேச சேவைகளாகவும் உள்ளன. தற்போது ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சில முக்கிய உள்நாட்டு வழித்தடங்களில் சேவைகள் குறைக்கப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 800 விமான சேவைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
எரிபொருள் விலை உயர்வை முழுமையாக பயணிகளின் மீது சுமத்த முடியாத நிலை இருப்பதால், நிறுவனத்தின் செலவுகள் அதிகரித்து வருவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. சேவை குறைப்பால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு மாற்று விமான வசதி, கட்டணமின்றி பயண தேதியை மாற்றும் அனுமதி அல்லது முழு கட்டணத்தை திருப்பி வழங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் ஏற்கனவே 26,700 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய ஏர் இந்தியாவுக்கு, தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மேலும் பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
