புதிய அரசு… புதிய திட்டம்… புது சிக்கல்… சுத்தி சுத்தி செக் வைக்கிறாங்களே…

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை உருவாக்கிய சட்டமன்ற தேர்தலில், திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை பெற காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான அரசு அமைந்தது. கடந்த 10ஆம் தேதி விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.

தேர்தல் பிரசாரத்தின் போது விஜய் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். அதில் மகளிரை கவர்ந்த இரண்டு முக்கிய அறிவிப்புகள் பெரும் கவனம் பெற்றன. ஏழை பெண்களின் திருமணத்திற்கு “அண்ணன் சீர் திட்டம்” மூலம் ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும் என்றும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு “தாய்மாமன் சீர் திட்டம்” மூலம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த திட்டங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை 1.18 லட்சம் ரூபாயாக உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன. அதில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை கணக்கில் எடுத்தால், அரசு ஆண்டுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு தங்கம் வழங்க வேண்டியிருக்கும். இதற்கே 2.4 டன் தங்கம் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்காக ஆண்டுக்கு 1.05 டன் தங்கம் தேவைப்படும். இரண்டு திட்டங்களையும் சேர்த்து பார்த்தால் ஆண்டுக்கு 5,500 கோடி ரூபாய்க்கும் அதிக செலவு அரசுக்கு ஏற்படும் நிலை உள்ளது.

இதற்கிடையில் ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, தங்க இறக்குமதி வரி உயர்வு மற்றும் தங்க விலையின் தொடர்ச்சியான ஏற்றம் ஆகியவை இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பெரிய சவாலாக மாறியுள்ளன. முதல் முறையாக ஆட்சிக்கு வந்துள்ள விஜய் அரசுக்கு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, வருவாயை அதிகரிப்பது மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போன்ற பல சவால்கள் முன்னிலையில் உள்ளன. அவற்றில் மிகப்பெரிய சவாலாக தங்க சீர் திட்டம் பார்க்கப்படுகிறது.

Related News

Latest News