அ.தி.மு.க. அணிகள் ஒன்றாக இணைந்தது… தொண்டர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து கொறடா உத்தரவை மீறியதாக கூறி அந்த 25 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி தரப்பினர் சபாநாயகரிடம் மனு அளித்தனர். அதே நேரத்தில், எங்களிடமே அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என கூறி தாங்கள் நியமித்தவரை கொறடாவாக அங்கீகரிக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தரப்பும் மனு கொடுத்தது.

இந்த விவகாரத்தில் சபாநாயகருக்கு 90 நாட்கள் வரை நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தாலும், 15 நாட்களுக்குள் மனுக்களை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த சில எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் சிலர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர்.

இதன் பின்னர் சமரச முயற்சிகள் தீவிரமடைந்தன. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பதவி வழங்க முடியாது, பின்னர் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதலில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும், எம்.எல்.ஏ. பதவியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் சமரசத்திற்கு முன்வந்தனர்.

இதையடுத்து இன்று எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தி பின்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அதன் பின்னர் இரு அணிகளும் ஒன்றிணைந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட மனுக்களும் திரும்பப் பெறப்பட்டன. இதனால் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்து, கட்சியின் எம்.எல்.ஏ. பலம் 42 ஆக உயர்ந்துள்ளது.

Related News

Latest News