வாஜ்பாய்க்கு ஒரு நீதி.. விஜய்க்கு ஒரு நீதியா? ஆளுநரை கிழித்து தொங்கவிட்ட ‘மூத்த தலைவர்’!

தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவி வரும் இழுபறி நிலை, டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், அவரை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநர் இராசேந்திர அர்லேகரின் நடவடிக்கையை, காங்கிரஸ் மூத்த தலைவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஆளுநரின் இந்தச் செயல்பாடு “வருந்தத்தக்கது மற்றும் முன்னுதாரணமற்றது” என்று விமர்சித்துள்ள அவர், மத்திய அரசின் ஏஜென்டாக அல்லது ஒரு “கைப்பாவையாக” ஆளுநர் செயல்படுகிறார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயகத்தின் அடிப்படை விதிகளின்படி, ஒரு தொங்கு சட்டமன்றம் அமையும் போது, தனிப்பெரும் கட்சியின் தலைவரை அழைத்து ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் மரபு.

“விஜய்யின் கட்சி 108 இடங்களை வைத்துள்ளது, அவருக்குப் போட்டியாக வேறெந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. அப்படியிருக்கையில், சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 10 முதல் 15 நாட்கள் அவகாசம் வழங்குவதுதான் சரியான முறை. அதை விடுத்து, ‘நான் திருப்தியடையவில்லை’ என்று ஆளுநர் அறிக்கை விடுவது எந்த வகையில் நியாயம்?” என்று சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 1996-ல் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் பெரும்பான்மைக்கு 111 இடங்கள் குறைவாக இருந்தபோதே, அன்றைய குடியரசுத் தலைவர் அவரை ஆட்சியமைக்க அழைத்த வரலாற்றையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளுநரின் இந்தத் தாமதத்திற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் சதி இருப்பதாகச் சிங்வி சந்தேகம் கிளப்பியுள்ளார். ஒருவேளை இந்த இழுபறி நீடித்தால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, அதன் மூலம் இதுவரை ஒருமுறை கூடத் தேர்தலில் வெல்லாத பாஜக, மறைமுகமாகத் தமிழகத்தை ஆளத் துடிக்கிறது என்பதுதான் அவரது குற்றச்சாட்டு.

“ஆளுநரின் விருப்ப அதிகாரம் என்பது சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர, ஆளும் கட்சிக்கு உதவும் வகையில் இருக்கக்கூடாது. 113 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுப் பட்டியலை விஜய் வழங்கிய பின்னரும், 118 கடிதங்களைக் கேட்பது அரசியல் சாசன நெறிமுறைகளை அவமதிக்கும் செயல்” என்று அவர் விளாசியுள்ளார்.

தற்போது தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்து ஆட்சியமைக்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் விஜய் தரப்பு நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த அதிகாரப் போட்டியில் மக்களின் தீர்ப்பு சிதைக்கப்படுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், ஆளுநர் அர்லேகர் இன்று எடுக்கப்போகும் முடிவு தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியலைத் தீர்மானிக்கும். வாஜ்பாயிக்கு வழங்கப்பட்ட அதே ஜனநாயக உரிமை விஜய்க்கும் வழங்கப்படுமா? அல்லது டெல்லியின் பிடிக்குள் தமிழகம் சிக்குமா? என்பதுதான் இப்போது ஒட்டுமொத்த மாநிலத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related News

Latest News