ஹோட்டலில் டேபிள் புக் செய்வதற்கோ அல்லது கஸ்டமர் கேருக்குப் போன் பேசுவதற்கோ இனிமேல் நீங்கள் மெனக்கெட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டுமோ, அதனை உங்களுக்காகத் தானாகவே போன் செய்து பேசும் ஒரு மிரளவைக்கும் புதிய தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது!
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்புவது மிகவும் எளிதாகிவிட்டது. ஆனால், ஒரு ஹோட்டலில் டேபிள் புக் செய்ய, வீட்டில் உள்ள ஏ.சி அல்லது வாஷிங் மெஷினை சரிசெய்ய சர்வீஸ் சென்டருக்குப் புகார் அளிக்க, அல்லது கடைகளுக்குப் போன் செய்து ஒரு பொருளின் விலையை விசாரிக்க, நாம் கட்டாயம் நேரடியாகப் போன் பேசித்தான் ஆக வேண்டும். பல நேரங்களில் நமக்கு இதற்குப் பொறுமை இருப்பதில்லை. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாகத்தான், கூகுள் நிறுவனம் தனது ‘ஜெமினி ஏ.ஐ’ (Gemini AI) செயலியில் ‘கால் பார் மீ’ (Call for Me) என்ற ஒரு அதிநவீன வசதியைக் கொண்டுவந்துள்ளது.
இந்த வசதியைப் பயன்படுத்துவது மிகவும் சுலபம். உங்கள் மொபைல் போனில் உள்ள கூகுள் ஜெமினி செயலியைத் திறந்து, அட் சிம்பல் போட்டு கால் ஃபார் மீ (“@Call for Me”) என்று டைப் செய்ய வேண்டும். அதன்பிறகு, நீங்கள் யாருக்குப் போன் செய்ய வேண்டும், அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்ற விவரங்களை அதில் கொடுக்க வேண்டும். உதாரணமாக, “நாளை இரவு ஏழு மணிக்கு இந்த ஹோட்டலில் எனக்கு ஒரு டேபிள் புக் செய்” என்று டைப் செய்தால் போதும். உடனடியாக ஜெமினி ஏ.ஐ, அந்த ஹோட்டலின் நம்பருக்குத் தானாகவே அழைப்பை மேற்கொள்ளும்.
அதற்கு முன்பாக, அது எந்த நம்பருக்குப் போன் செய்யப் போகிறது, அவர்களிடம் என்ன பேசப் போகிறது என்ற ஒரு சிறு சுருக்கத்தை உங்களுக்குத் திரையில் காட்டும். நீங்கள் அதைச் சரிபார்த்து ‘ஓகே’ சொன்னவுடனே, அந்த நம்பருக்குப் போன் செய்து, தான் ஒரு ஏ.ஐ (AI) என்பதை அவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, நீங்கள் சொன்ன வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டு உங்களுக்குத் தகவலைத் தெரிவிக்கும். அது பேசிக்கொண்டிருக்கும்போது, நடுவில் நீங்களே பேச நினைத்தாலும் அந்த அழைப்பை நீங்கள் நேரடியாகத் தொடரலாம். அல்லது எப்போது வேண்டுமானாலும் அழைப்பைத் துண்டிக்கலாம்.
மனிதர்களின் அன்றாட வேலைகளை ஏ.ஐ தொழில்நுட்பம் எப்படி எளிதாக்குகிறது என்பதற்கு இந்த புதிய அப்டேட் ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும். தற்போது சோதனை அடிப்படையில் அமெரிக்காவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கூகுள் ஜெமினி அம்சம், விரைவில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிலும் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
