சென்னை அடுத்த மேடவாக்கம், மாம்பாக்கம் பிரதான சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையின் பாரில் இரண்டு நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அதிகப்படியான மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் ஆம்லெட் கேட்டு சண்டையிட்டு உள்ளனர்.
அந்த பாரில் பணியாற்றிவரும் மாஸ்டர்கள் பிரச்சனையில் ஈடுபட்ட இருவரையும் எச்சரித்து பாரிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதையடுத்து அந்த இருவரும் நேற்று இரவு அதே பாரில் ஏழு பேருடன் கத்திகளுடன் நுழைந்து பாரில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு மாஸ்டர்களையும் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு பாரில் வைத்திருந்த பொருட்களின் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் வெட்டு காயங்களுடன் கீழே சரிந்து கிடந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார், பாரில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கையில் கத்திகளுடன் பாரில் நுழைந்து இருவரை வெட்டிய ஏழு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.