கண்ணதாசன் என்னும் காவியத்தலைவன்

279
Advertisement

காரைக்குடி அருகே உள்ள சிறுகூடல்பட்டியில், 1927ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 24ஆம் தேதி, 10 பிள்ளைகளில் எட்டாவதாக பிறந்தவர் கண்ணதாசன். எட்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை கைவிட்ட அவர், இலக்கிய ஆர்வத்தால் தமிழ் பத்திரிகைகளில் பணியாற்ற துவங்கினார்.

மொழியின் நுணுக்கங்களை உள்வாங்கி, உணர்வுபூர்வமான வார்த்தைகளாக வடிக்கும் திறமை, கண்ணதாசனிடம் இயல்பாகவே இருந்தது. அதனாலேயே  அவரால் 5000 பாடல்கள், 6000 கவிதைகள் மற்றும் 232 நூல்களை இலக்கிய உலகிற்கு அர்ப்பணிக்க முடிந்தது.

தமிழ் வரலாற்றில் சுப்ரமணிய பாரதிக்கு பின், மாபெரும் மொழி ஆளுமையாக விளங்கிய கண்ணதாசன் கவியரசு என்றே அழைக்கப்பட்டார்.

Advertisement

‘சேரமான் காதலி’ புதினத்திற்காக சாஹித்ய அகாதெமி விருது வாங்கிய கண்ணதாசன், ‘குழந்தைக்காக’ திரைப்படத்தில் எழுதிய  பாடலுக்காக, சிறந்த பாடல் வரிகளுக்காக முதல் முறையாக வழங்கப்பட்ட தேசிய விருதையும் பெற்றார்.

‘கன்னியின் காதலி’ படத்தில் ‘கலங்காதிரு மனமே’ துவங்கி, ‘மூன்றாம் பிறை’ படத்தில் ‘கண்ணே கலைமானே’ பாடல் வரையும், பேனா என்னும் உளியால் உணர்வுகளை வார்த்தைகளாக செதுக்கி வைத்தார் கண்ணதாசன்.

மகிழ்ச்சி, துக்கம், வறுமை, காதல், பிரிவு போன்ற மனிதனின் ஆழமான உணர்ச்சிகளை யதார்த்தமான நடையில், கலை அழகு குறையாமல் சுட்டி காட்டிய காவிய கலைஞனாக வலம் வந்த அவர், 1981ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற தமிழ் மாநாடு ஒன்றிற்கு சென்ற போது, தனது 54வது வயதில் இயற்கை எய்தினார்.

அவர் உடல் தான் இந்த உலகை விட்டு பிரிந்ததே தவிர, அவர் விட்டு சென்ற கலையின் சுவடுகள், காலம் கடந்த பின்னரும் அழியாமல் நிலைப்பதோடு, இந்த காலத்துக்கும் கச்சிதமாக பொருந்தி போவது தான் சிறப்பு.   

‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்’ போன்ற தத்துவ பாடல்கள் மூலம் பாமரனையும் படிப்பித்த கண்ணதாசனின் கலைப்பயணம் இனியும் தொடரும்.