கர்நாடகாவில் தயாரித்து விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களிலும் கன்னட மொழியில் அதன் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் பதவியேற்றதில் இருந்தே கன்னட மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறேன். கன்னடர்களுக்கும், கன்னட மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எனது அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களின் அட்டைகளிலும் கன்னடத்தில் அதன் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்கள், நுகர்வோர் பயன்படுத்தும் அன்றாட பொருட்கள் ஆகியவற்றில் கன்னட மொழி இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.