ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முழக்கமிட்டு கவனம் பெற்ற ஜூலி, பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பான போட்டியாளராக அறிமுகமானார். குறிப்பாக ஓவியாவை குறித்த அவரது கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பின்னர் அவை பொய்யாக வெளிச்சத்திற்கு வந்த சம்பவமும் ரசிகர்களிடம் நீண்ட காலம் பேசப்பட்டது.
இந்த எதிர்மறை விமர்சனங்களுக்குப் பிறகு, ஜூலி மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். சில திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தபோதிலும், நீட் தேர்வில் உயிரிழந்த மாணவி அனிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருந்த திட்டம் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்துகொண்ட ஜூலி, தற்போது அரசியல் தளத்தில் கவனம் ஈர்க்க முயற்சி செய்து வருகிறார். குறிப்பாக தவெக விஜய் மற்றும் அவரது கட்சியை விமர்சித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். கடந்த மாதம் திமுகக்கு ஆதரவாக அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, அனுமதி இன்றி அவ்வையார் சிலை அருகே பதாகைகளுடன் போராட்டம் நடத்திய ஜூலியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், தனது நடவடிக்கையை ஜூலி “கருத்து தெரிவிக்கும் உரிமை” என நியாயப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில், இந்த செயல் அரசியல் நோக்கமா அல்லது தனிப்பட்ட விளம்பர முயற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
