உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகவேந்திர பாஜ்பாய் (35) என்ற பத்திரிகையாளர் ஒரு முன்னணி இந்தி நாளிதழில் நிருபராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த பத்திரிகையாளர் தனது இரு சக்கர வாகனத்தில் சீதாபூர் – டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் 3 முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். காவல்துறையினர் பத்திரிகையாளரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அரசு நெல் கொள்முதல் மற்றும் நில பேரங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து ராகவேந்திர பாஜ்பாய் செய்தி வெளியிட்ட நிலையில் 4 அரசு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கடந்த பத்து நாட்களாக ராகவேந்திராவுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.