செவ்வாய் கிரகத்தின் இரகசியத்தை உடைக்கும் ‘ஜப்பான்’! 2031-இல் நடக்கப்போகும் சம்பவம்?

ஜப்பான் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுச் சாதனைக்குத் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது! செவ்வாய் கிரகத்தின் நிலவுகளான போபோஸ் (Phobos) மற்றும் டீமோஸை (Deimos) ஆராய்ச்சி செய்து, போபோஸ் நிலவிலிருந்து மண் மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வருவதற்காக, எம்.எம்.எக்ஸ் (Martian Moons eXploration – MMX) என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா (JAXA).

தனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து (Tanegashima Space Center) எச்-3 (H3) ராக்கெட் மூலம் புறப்பட்ட இந்த நான்கு டன் எடையுள்ள விண்கலம், சுமார் 500 முதல் 600 மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணித்து செவ்வாய் மண்டலத்தைச் சென்றடையவுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் நிலவுகள் எவ்வாறு உருவானது என்ற பல காலத்து மர்மத்திற்கு விடை காண்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நிலவுகள் செவ்வாயின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்ட சிறுகோள்களா (Asteroids), அல்லது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் மீது ஏதேனும் பெரிய பொருள் மோதியதால் சிதறிய இடிபாடுகளா என்பதை இந்த ஆய்வு துல்லியமாக வெளிக்கொண்டு வரும்.

மேலும், செவ்வாயிலிருந்து விண்வெளியில் சிதறிய பழங்காலப் பொருட்கள் போபோஸ் நிலவில் படிந்திருக்க வாய்ப்புள்ளதால், செவ்வாயின் ஆரம்பகால வரலாற்றையும் நம்மால் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

மிகவும் பலவீனமான ஈர்ப்பு விசை கொண்ட போபோஸ் நிலவில் தரையிறங்கி ரெகோலித் (Regolith) எனப்படும் மண் மாதிரிகளைச் சேகரிப்பது மிகப்பெரிய சவாலாகும். இதற்காக பிரான்ஸ் (CNES) மற்றும் ஜெர்மனி (DLR) நாடுகள் இணைந்து உருவாக்கிய ஐடிஃபிக்ஸ் (IDEFIX) என்ற 30 கிலோ எடையுள்ள சிறிய ரோவர், 2029-இல் போபோஸில் தரையிறக்கப்பட்டு ஆய்வு செய்யவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜப்பானின் விண்கலம் போபோஸ் நிலவின் மேற்பரப்பிலிருந்தும் அதற்கு அடியிலிருந்தும் குறைந்தது 10 கிராம் மண் மாதிரிகளைச் சேகரிக்கும். இத்திட்டத்தில் நாசா (NASA) மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையும் (ESA) தங்களது அதிநவீன கருவிகள் மூலம் கை கோர்த்துள்ளன.

ஏற்கனவே ஹயாபுசா (Hayabusa) திட்டங்கள் மூலம் சிறுகோள்களிலிருந்து மாதிரிகளைக் கொண்டு வந்து சாதனை படைத்த ஜப்பான், இப்போது செவ்வாயின் நிலவிலிருந்து நேரடியாக சாம்பிள்களைக் கொண்டு வரும் முதல் முயற்சியில் களமிறங்கியுள்ளது.

சேகரிக்கப்படும் இந்த அரிய விண்வெளி மாதிரிகள் அடங்கிய காப்சூல் (Return Capsule), வரும் 2031-ஆம் ஆண்டு தென் ஆஸ்திரேலியாவின் வூமேரா (Woomera) பகுதியில் பாதுகாப்பாக வந்து தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News