சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட திடீர் ஆய்வுக்கு, சமூக வலைத்தளத்தில் பரவிய ஒரு வீடியோ முக்கிய காரணமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் குறைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் வழக்கமான அலுவல் பணிகளை முடித்த அவர், மாலையில் திடீரென சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் விஜயை பார்த்த நோயாளிகள், உறவினர்கள் மற்றும் ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்த அவர், மருத்துவ வசதிகள், சிகிச்சை முறைகள் மற்றும் தேவைகள் குறித்து விசாரித்தார். மேலும், குழந்தைகளை சந்தித்து அன்புடன் ஆசீர்வதித்ததுடன், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த திடீர் ஆய்வுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் 35 விநாடிகள் ஓடும் வீடியோ ஒன்று பரவியது. அதில், மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் நிர்வாக குறைபாடுகள் இருப்பதாகவும், ஏழை மக்கள் அதிகம் வரும் இடத்தில் சில சேவைகளுக்கு பணம் கேட்கப்படுவதாகவும் ஒரு பெண் கூறியிருந்தார்.
எழும்பூர் மருத்துவமனை முதலமைச்சர் விஜயின் பிறப்பிடமாக இருப்பதால், அந்த மருத்துவமனை மீதான அவரின் தனிப்பட்ட அக்கறையும் இந்த ஆய்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. விஜயின் நேரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
