தமிழக அரசியலில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாகவும், திமுகவின் ‘டாப்’ அமைச்சர்களில் ஒருவராகவும் வலம் வந்த செந்தில் பாலாஜிக்கும், திமுக தலைமைக்கும் இடையே இப்போது மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போக்குவரத்துத் துறை வேலைவாய்ப்பு முறைகேடு, டாஸ்மாக் ஊழல் புகார்கள் மற்றும் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-க்களை விலைபேச முயன்றதாக எழுந்த ‘குதிரை பேரம்’ புகார் என அடுக்கடுக்கான சிக்கல்களில் செந்தில் பாலாஜி சிக்கியுள்ளார்.
இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துவதாக திமுக தலைமை கருதுகிறதாம்.
ஆரம்பத்தில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோதும், அவருக்கு அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்காமல் திமுக தலைமை அவருக்குப் பெரும் ஆதரவாக இருந்தது.
ஆனால், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில், செந்தில் பாலாஜி மீதான அதிருப்திதான் பல தொகுதிகளில் பின்னடைவை ஏற்படுத்தியதாக மூத்த நிர்வாகிகள் ஸ்டாலினிடம் புகார் வாசித்துள்ளனர்.
இதன் விளைவாக, செந்தில் பாலாஜி மீதான தலைமையின் பார்வை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சமீபத்திய குதிரை பேர புகாரில் கட்சித் தலைமை தனக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்று செந்தில் பாலாஜி மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தன்னையும் தனது சகோதரர் அசோக்கையும் கட்சி இனி காப்பாற்றாது என்று முடிவெடுத்த செந்தில் பாலாஜி, இப்போது தனது ரூட்டை மாற்றத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய புலனாய்வு அமைப்புகளின் பிடியிலிருந்து தப்பிக்க டெல்லியில் உள்ள சில முக்கியத் தலைவர்களுடன் அவர் நெருக்கம் காட்டி வருவதாக அறிவாலய வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
இதன் ஒரு பகுதியாகவே, கடந்த சில நாட்களாக திமுக தலைமையின் அழைப்புகளை அவர் தவிர்த்து வருவதாகவும், சென்னையில் இருந்தாலுமே ஸ்டாலின் அல்லது உதயநிதியைச் சந்திக்காமல் ஒதுங்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் செந்தில் பாலாஜியின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இது திமுக தலைமைக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
“செந்தில் பாலாஜி என்ன செய்யப் போகிறார்?” என்ற கேள்வி இப்போது திமுகவில் ஒரு விவாதமாகவே மாறியுள்ளது. ஒருவேளை அவர் கட்சியில் இருந்து விலகி வேறு பக்கம் சாயப்போகிறாரா அல்லது தனி அணியாகச் செயல்படப் போகிறாரா என்பதே இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
கொங்கு மண்டலத்தின் முக்கியத் தூணாக இருந்த ஒருவரே தலைமையிடம் இருந்து விலகிச் செல்வது திமுகவிற்குப் பெரும் பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
