திமுகவில் 20 மாவட்டச் செயலாளர்கள் ‘நீக்கம்’? ஸ்டாலின் எடுக்கப்போகும் அந்த ‘முடிவு’?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியின் உள் கட்டமைப்பில் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுத்துள்ளது.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குக் கட்சியின் விசுவாசமான நிர்வாகிகள் பலரும் ஒரு பரபரப்பான கடிதத்தை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தேர்தலில் தோல்விக்குக் காரணமாக இருந்த மாவட்டச் செயலாளர்கள் மீது எவ்விதத் தயக்கமும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தக் கடிதத்தின் சாராம்சம் என சொல்லப்படுகிறது.

தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்ட திமுகவின் மறுசீரமைப்புக் குழு, கட்சியின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வை நடத்தித் தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, நிர்வாக வசதிக்காகத் திமுகவின் மாவட்ட அலகுகள் 78-லிருந்து 120-க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட உள்ளன.

இதன் மூலம் ஒரு மாவட்டச் செயலாளரின் கீழ் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் மட்டுமே இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

நீண்ட காலமாகப் பதவியில் இருக்கும் சீனியர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய நிர்வாகிகளை நீக்க வேண்டும் என்ற அழுத்தம் கட்சிக்குள் அதிகரித்துள்ளது.

இருப்பினும், இந்தப் பதவி மாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்களில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோரிடையே சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

குறிப்பாக, இளைஞரணி நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகளை வழங்குவதில் ஒரு தரப்பு ஆர்வம் காட்டினாலும், சீனியர்களை ஒட்டுமொத்தமாகப் பகைத்துக்கொள்ளக் கூடாது என மற்றொரு தரப்பு கருதுகிறதாம்.

ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே இந்த அதிரடி மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறவுள்ள திமுகவின் ‘முப்பெரும் விழா’ காரணமாக இது தள்ளிப்போய் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

“பதவி பறிக்கப்பட்டால் நிர்வாகிகள் வேறு கட்சிக்குத் தாவி விடுவார்களோ என்ற அச்சத்தில் மாற்றங்களைத் தள்ளிப்போட வேண்டாம்” என்று நிர்வாகிகள் தங்களது கடிதத்தில் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டச் செயலாளர் தோப்பு வெங்கடாசலம் நீக்கப்பட்ட போது, உடனடியாக அவருக்குப் பதிலாக ஒருவரை நியமிக்காதது கட்சிக்குச் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பழைய முகங்களுக்கு விடை கொடுத்துவிட்டு, கட்சிக்கு விசுவாசமான புதிய இரத்தத்தைப் பாய்ச்ச வேண்டிய தருணம் இது என்று ஸ்டாலினுக்கு அவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

முப்பெரும் விழாவிற்குப் பிறகு அறிவாலயத்திலிருந்து வெளிவரப் போகும் அந்த அறிவிப்புகள் திமுகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News