ஆதவ் அர்ஜுனாவின் ‘காரை’ பயன்படுத்தும் CM விஜய்?

சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை வென்ற தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். பதவியேற்புக்கு பின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.

தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோரையும் நேரில் சென்று சந்தித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. இந்தநிலையில் மேற்கண்ட தலைவர்களின் வீடுகளுக்கு செல்லும்போது, விஜய் பயன்படுத்திய கார் தற்போது விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய்யிடம் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார், லெக்ஸஸ் எல்எம் மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் என்று ஏகப்பட்ட சொகுசு கார்கள் இருக்கின்றன. அத்துடன் தற்போது அவர் தமிழக முதலமைச்சராகவும் இருக்கிறார். எனவே அரசு தரப்பு காரினையும் அவரால் பயன்படுத்த முடியும்.

அப்படி இருந்தும் ஆதவ் அர்ஜுனாவின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) காரினை விஜய் பயன்படுத்தி வருகிறார். விஜய் பயணம் செய்த இந்த கார் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அமைச்சராக பதவியேற்று கொண்டுள்ள, ஆதவ் அர்ஜூனாவால் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும்.

ஆதவ் அர்ஜூனா நிறுவனராக உள்ள நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட காரை விஜய் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவது, பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கும், விஜய் இந்த காரில் தான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News