Saturday, December 6, 2025

பிரான்சில் இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு! ‘அந்த’ காரணம் தாங்க ஹைலைட்டே!

இந்தியாவின் யூனிஃபைடு பேமென்ட் இன்டர்ஃபேஸ் அதாவது UPI சேவை பிரான்சில் அறிமுகமானதையடுத்து, அங்கு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை 40 சதவீதம் உயர்ந்துள்ளதாக பிரெஞ்சு நிதி நிறுவனமான Lyra Network நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டோப் மரியட் தெரிவித்துள்ளார்.

குளோபல் ஃபின்டெக் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், ‘ஓர் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் யுபிஐ கட்டண முறையை பிரான்சின் முக்கிய சுற்றுலா மையமான ஈஃபிள் கோபுரத்தில் அறிமுகப்படுத்தினோம். சமீபத்தில் ஈஃபிள் கோபுரத்தின் பொது மேலாளருடன் பேசும்போது, யுபிஐ சேவை அறிமுகமானதிலிருந்து இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் கூறியதில் எனக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது,’ என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, ‘இந்திய சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, தங்களுக்குப் பழக்கமான யுபிஐ போன்ற டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்துவதில் வசதியையும் பாதுகாப்பையும் உணருகின்றனர். இதனால் அவர்கள் செலவினங்களையும் பரிவர்த்தனைகளையும் எளிதாகச் செய்கிறார்கள்,’ எனவும் கூறினார்.

அத்துடன், ‘மிக விரைவில் பிரான்சின் புகழ்பெற்ற Bicester Village ஷாப்பிங் மையத்திலும் யுபிஐ கட்டண வசதி அறிமுகப்படுத்தப்படும். இது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் சுலபமான அனுபவத்தை வழங்கும்,’ எனவும் கிறிஸ்டோப் மரியட் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை, இந்தியாவின் டிஜிட்டல் கட்டண தொழில்நுட்பம் உலகளவில் விரிவடைவதற்கான முக்கியமான ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News