தமிழ் திரைப்பட உலகில் ‘ராஜா ராணி’ மற்றும் ‘தெறி’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அட்லீ. தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற வெற்றி படங்களை இயக்கி, பட்டித் தொட்டி எங்கும் புகழ்பெற்றார். அதன் பின்னர், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் ‘ஜாவான்’ என்ற பான் இந்தியா படத்தை இயக்கினார். இந்த படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது, அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘ராக்கா’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இந்நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் தனது மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, மனைவிக்காக பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.
இந்த நிலையில், அட்லீ–ப்ரியா தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014ஆம் ஆண்டு பிரியாவை திருமணம் செய்துகொண்ட அட்லீக்கு, ஏற்கனவே ‘மீர்’ என்ற ஆண் குழந்தை உள்ளான். தற்போது பெண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது.
திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

