சூலூர் அருகே உள்ள அரசூர் பல்லவாநகரைச் சேர்ந்த நாகராஜ் (52) என்பவர், மதுவுக்கு அடிமையார் இவர் நேற்று முன்தினம், மது அருந்த பணம் கேட்டபோது மனைவி சுவேதா (38) மறுத்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதில், கோபம் அடைந்த நாகராஜ், சுவேதாவை தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த கத்தியால் சுவேதாவின் இடது கை மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுவேதா, அலறித் துடித்தார்.சுவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, காயமடைந்த சுவேதாவை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுவேதா, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், நாகராஜை கைது செய்து, அவரிடமிருந்து கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை பறிமுதல் செய்தனர்.மது அடிமை கணவரின் கொடூர செயலால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.