Friday, April 18, 2025

HP Vs SKY சந்தைக்கு வந்த ‘சண்டை’ MI அணிக்குள் ‘வெடித்தது’ கலவரம்

ஆளுக்கு 5 கோப்பைகளை வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான் நடப்பு IPL தொடரில், அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. பாயிண்ட் டேபிளின் அடியில் இரண்டு அணிகளும் பர்பி தேடுவதால், சொந்த ரசிகர்கள் நொந்து, வெந்து போய் இருக்கின்றனர்.

இதற்கிடையில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக, அந்த அணியின் முக்கிய வீரர்கள் போர்க்கொடி உயர்த்தி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூரு அணி 10 வருடங்களுக்கு பிறகு மும்பையை, அவர்களின் சொந்த மைதானமான வான்கடேவில் வைத்து வீழ்த்தியுள்ளது.

இந்த தோல்விக்கு மும்பையில் நடந்த உள்குத்துகள் தான் காரணமாம். போட்டியின்போது ஹர்திக் செட் செய்த பீல்டிங்கை தீபக் சாஹர், ட்ரெண்ட் போல்ட் இருவருமே மதிக்கவில்லை. அவர்கள் இஷ்டத்திற்கு பீல்டிங் அமைத்து பந்து வீசினர்.

இதுகுறித்து போட்டி முடிந்த பின் ஹர்திக், ” பேட்ஸ்மேன்கள் மீது தவறு கிடையாது. அவர்களால் முடிந்ததை செய்து விட்டனர். பவுலர்களை திட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அதைச் செய்தால் நன்றாக இருக்காது,” என்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு பேசினார்.

இந்தநிலையில் திலக் வர்மா, தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட் மூவரும் இணைந்து, ஆகாஷ் அம்பானியிடம் ஹர்திக் குறித்து புகார் அளித்து இருக்கிறார்களாம். ஹர்திக் மட்டுமே முடிவை எடுக்கிறார். எங்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

என்று பக்கம், பக்கமாக குறை சொல்லி இருக்கின்றனராம். Retired Out முறையில் தன்னை ஆட விடாமல் வெளியேற்றியதால், திலக் வர்மாவும் ஹர்திக்கிற்கு எதிராக சிவப்புக்கொடியை பறக்க விட்டுள்ளார். இதனால் விரைவில் சூர்யகுமார் யாதவ் தலைமையில், மும்பை அணி விளையாடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது

கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ், கேப்டனாக அறிவிக்கப்பட்ட போது ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா மூவருமே அவருக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை. தற்போது அந்த லிஸ்டில் மேலும் 3 வீரர்கள் இணைந்துள்ளனர்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் எப்போது வேண்டுமானாலும், ஒரு கலவரம் வெடிக்கலாம் என்று தெரிகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், ” பேட்டிங், பவுலிங் என ஒரு ஆல்ரவுண்டராக ஹர்திக் தன்னை நிரூபித்து விட்டார்.

ஆனால் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள், பொறுப்பில்லாமல் ஆடி மும்பையைத் தோற்கடிக்கின்றனர். இந்த உட்கட்சி பூசலால் தான் அணி பாயிண்ட் டேபிளில் பள்ளத்தில் கிடக்கிறது. இதுபோன்ற சுயநலவாதிகள் அணிக்குத் தேவையா?,” என்று கடுமையாக, சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Latest news