ஆதாரில் பெயரை எத்தனை முறை மாற்றலாம்? UIDAI விளக்கம்… அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

ஆதார் அட்டை இன்று வெறும் அடையாள ஆவணமாக மட்டும் இல்லாமல், வங்கிக் கணக்குகள், சிம் கார்டுகள், பான் இணைப்பு மற்றும் அரசுத் திட்டங்களுக்கான முக்கிய ஆவணமாக பயன்பட்டு வருகிறது. எனவே, மொபைல் எண், முகவரி அல்லது பிற தனிப்பட்ட தகவல்களில் மாற்றம் ஏற்பட்டால், அவற்றை ஆதாரில் உடனடியாக புதுப்பிப்பது அவசியமாகிறது. இதுகுறித்து UIDAI தெளிவான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

UIDAI விதிகளின்படி, ஆதார் அட்டையில் உள்ள முகவரியை தேவைக்கேற்ப பலமுறை மாற்றிக்கொள்ளலாம். இதற்காக myAadhaar இணையதளத்தை பயன்படுத்தலாம். அடிக்கடி வீடு மாற்றுபவர்கள் மற்றும் வேறு நகரங்களுக்கு குடிபெயர்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் தகவல் புதுப்பிக்க ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டும்.

அதேபோல், மொபைல் எண்ணையும் பலமுறை மாற்ற முடியும். இதற்காக அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். UIDAI செயலி மூலமும் சில சேவைகள் வழங்கப்படுகின்றன. புதிய எண்ணை பதிவு செய்த பிறகு OTP சரிபார்ப்பு உள்ளிட்ட செயல்முறைகள் அவசியம்.

இருப்பினும், பெயர், பிறந்த தேதி மற்றும் பாலின விவரங்களில் மாற்றம் செய்ய வரம்புகள் உள்ளன. ஆதாரில் பெயரை இரண்டு முறை மட்டுமே மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிறந்த தேதி மற்றும் பாலினத்தை தலா ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். எனவே, இந்த விவரங்களை திருத்தும்போது மிகுந்த கவனம் தேவை.

வங்கிச் சேவைகள், அரசு நலத்திட்டங்கள் மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை சிரமமின்றி பயன்படுத்த, ஆதாரில் சரியான கைபேசி எண் மற்றும் முகவரியை புதுப்பித்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

Related News

Latest News