ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிப்பது சமூக அநீதி என தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிரந்தர நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னை கொளத்தூரில் தமிழக அரசால் புதிதாக திறக்கப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
பெரியார் மருத்துவமனையில், 266 மருத்துவப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவமனைகளை உருவாக்கும் அரசு அதற்கு தேவையான மனிதவளங்களை ஏற்படுத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்களை இடமாற்றம் செய்தால், எந்த மருத்துவமனையிலும் மக்களுக்கு முறையான சேவை கிடைக்காது என்பதை அரசு உணர வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், நிரந்தர அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.