தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாட்களை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் ஏராளமானோர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்திலிருந்தும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் வகையில் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க தொலைதூர பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
