செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ (AI) உலகில், முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ-ன் (OpenAI) ஜிபிடி-6 ஆஸ்ட்ராவை (GPT-6 Astra) விட அதிவேகமான மற்றும் 150 மடங்கு குறைந்த செலவிலான புதிய ஏஐ மாடலை ஒரு இந்தியர் உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்! ஒடிசாவைச் சேர்ந்த இந்தியத் தொழிலதிபர் சாம் பசுபாலக் (Sam Pasupalak) தலைமையிலான ஸ்கைஃபால் ஏஐ (Skyfall AI) நிறுவனம், ‘ஸ்கை-001’ (SKY-001) என்ற பிரத்யேக செயற்கை நுண்ணறிவு மாதிரியை 18 மாத கால உழைப்பில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
பொறியியல் துறையை மட்டுமே இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த SKY-001 மாடல், கேட் (CAD – Computer-Aided Design) மற்றும் பிஐஎம் (BIM – Building Information Modelling) போன்ற சிக்கலான பொறியியல் மற்றும் கட்டிட வடிவமைப்புப் பணிகளை மிகத் துல்லியமாகச் செய்கிறது. பொதுவாக ஏஐ மாடல்கள் பெரிய டிசைன்களை ஒரே நேரத்தில் உருவாக்கும் போது சில முக்கிய பாகங்களை விட்டுவிடும் அபாயம் உண்டு. ஆனால், SKY-001 மாடலானது சிக்கலான இயந்திர அமைப்புகளைப் பல சிறு பகுதிகளாகவும், கட்டிடங்களின் வரைபடங்களைத் தனித்தனி அறைகளாகவும் பிரித்து, படிநிலைகளாகத் (Stage-by-stage) துல்லியமாக வடிவமைக்கும் திறன் கொண்டது.
செயல்திறன் ஒப்பீட்டில், ஜிபிடி-6 ஆஸ்ட்ரா ஒரு மாதிரிக்கு $0.75 செலவிடும் வேளையில், SKY-001 வெறும் $0.005 என்ற கணக்கில் 150 முதல் 210 மடங்கு குறைந்த செலவிலேயே செயல்படுகிறது. மேலும் இது 51 முதல் 125 மடங்கு அதிவேகமாகவும், வடிவமைப்பு துல்லியத்தைக் கணிக்கும் ஐஓயு (IoU – Intersection over Union) அளவீட்டில் 79.7 சதவீதம் புள்ளிகள் பெற்று, ஜிபிடி-6 ஆஸ்ட்ராவை (79.1%) விட சற்று கூடுதல் துல்லியத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
முன்னதாக மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட மாலூபா (Maluuba) என்ற ஏஐ ஆய்வு நிறுவனத்தின் இணை நிறுவனரான சாம் பசுபாலக், தற்போது இந்த பிரம்மாண்ட கண்டுபிடிப்பின் மூலம் உலகளவில் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். முற்றிலும் பொறியியல் பணிகளுக்காக மட்டுமே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த SKY-001 ஏஐ மாடல், எதிர்காலத்தில் கட்டுமான மற்றும் தொழில்துறை வடிவமைப்புத் துறையில் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
