தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

330
Advertisement

கோவிட் 19 வைரசுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம்பெண்ணுக்கு 7 கோடியே 40 லட்ச ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோவைக் கட்டுப்படுத்துவற்கானப் பிரதான மருந்தாகத் தடுப்பூசியை மட்டுமே எல்லா நாடுகளும் நம்பியுள்ளன. எனினும், பல நாடுகளில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களின் தயக்கத்தைப் போக்கி, தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்கப்படுத்தும்விதமாக இலவச விமானப் பயணம், இலவசப் பீர், உணவுப் பொருட்கள், லாட்டரி டிக்கெட்டுகள் போன்ற புதுமையான நடவடிக்கைகளை சில நாடுகள் எடுத்துள்ளன.

அந்த வகையில் ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள தனியார் லாட்டரி நிறுவனம் ஒன்று தடுப்பூசி செலுத்திக்கொள்வோரை ஊக்கப்படுத்த பரிசுத் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. அதன்படி, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். அந்தப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும்.

இதில் 3 மில்லியன்பேர் தங்கள் பெயரைப் பதிவு செய்திருந்தனர்.
தற்போது இந்தப் பரிசுத் தொகையை வென்று ஒரே இரவில் ஒரு மில்லியன் டாலர் தொகையைப் பெற்றுப் பணக்காரர் ஆகியுள்ளார் 25 வயதான ஜோன் ஜு என்ற இளம்பெண்.

இந்தத் தகவலைத் தெரிவிப்பதற்காக அந்த இளம்பெண்ணுக்கு லாட்டரி நிறுவன அதிகாரிகள் போன் செய்தபோது முதலில் எடுக்கவில்லை. மீண்டும் அழைத்தபோது போனை எடுத்துப்பேசிய ஜு பரிசுத் தகவலைக்கேட்டு மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.

அந்த மகிழ்ச்சி பொங்க, ”வெளிநாடு செல்ல அனுமதித்தால், எனது குடும்பத்தை சீனாவில் இருந்து வெளியேற்றி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்க விரும்புகிறேன். அவர்களுக்குப் பரிசுகளை வாங்கித் தருவேன். இந்தப் பரிசுத் தொகையை முதலீடுசெய்ய இருக்கிறேன். தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவிசெய்யவும் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் ஜு.

இந்த மொத்தப் பரிசுத் தொகையோடு 100 பரிசு அட்டைகளையும், ஆயிரம் டாலர்களையும் செலவழிக்க அந்த லாட்டரி நிறுவனம் வழங்கியுள்ளது.

பொதுமக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை செயல்படுத்தக்கூட ஊக்கப்பரிசுகளை அறிவிக்க வேண்டியதாயிருக்கிறது. நல்ல வேளை, சாப்பிடுவோருக்கு பரிசுத் திட்டங்களை யாரும் அறிவிக்கவில்லை.