Wednesday, January 21, 2026

தடாலென குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை! இது சரிவின் ஆரம்பமா?

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். சேமிப்பு மற்றும் முதலீட்டின் அடையாளமாக இருக்கும் தங்கம், வரலாறு காணாத உயர்வை  எட்டிப்பிடித்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளதால், சாமானிய மக்கள் நகை வாங்குவது எட்டாக் கனியாகிவிட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தங்க விலை சுமார் 1200 சதவீதம் உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று செப்டம்பர் 16ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,280க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.82,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் செப்டம்பர் 17 அதாவது இன்று தங்கத்தின் விலை சற்றே குறைந்து, நகை விரும்பிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.10,270க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.82,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.8,510க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.68,080க்கும் விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 குறைந்து 142 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,42,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகி வருவதால், எதிர்காலத்தில் விலை எவ்வாறு மாறும் என்ற கேள்வி இன்னும் பதிலளிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது.

உலக சந்தையில் டாலர் மதிப்பு குறைதல், வட்டி விகிதம் உயர்வு, பங்குச் சந்தை வலுப்பெறுதல், மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை குறைத்தல் ஆகியவை நடந்தால் தங்கம் விலை தொடர்ந்து குறையும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Related News

Latest News