மீன்பிடி தடைகாலம் தொடக்கம்; மீன் பிரியர்களுக்கு விலை உயர்வு எச்சரிக்கை…

தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த காலத்தில் மீன்கள் இனப்பெருக்கம் செய்து அதிகளவில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால், விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அரசால் தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம் கடல் வளம் பாதுகாக்கப்படுவதே முக்கிய நோக்கமாகும்.

தடைகாலம் தொடங்கியதையடுத்து ராமேசுவரம் துறைமுகத்தில் மட்டும் சுமார் 800 விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியக்குடி, ஏர்வாடி, கீழக்கரை, மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் 2,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்த காலத்தில் விசைப்படகுகளில் பயன்படுத்தப்படும் மீன்பிடி வலை, மடி பலகை, ஐஸ் பாக்ஸ், சமையல் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தும் கரைக்கு கொண்டு வரப்படுகின்றன. இருப்பினும் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவை மூலம் கிடைக்கும் மீன்கள் மட்டுமே சந்தைக்கு வருகின்றன.

இதனால் மீன் வரத்து குறையும் நிலை உருவாகி, அடுத்த சில நாட்களில் அனைத்து வகை மீன்களின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீன் பிரியர்கள் கவலையில் உள்ளனர். அதே சமயம் கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த தடைகாலம் அவசியமானதாக மீன்வளத்துறை வலியுறுத்துகிறது.

Related News

Latest News