Friday, January 24, 2025

புழல் சிறையில் தீ விபத்து : கைதிகள் தொடர்பான ஆவணங்கள் எரிந்து சேதம்

புழல் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் கைதிகள் தொடர்பான ஆவணங்கள் எரிந்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை பிரிவு, விசாரணை பிரிவு, பெண்கள் பிரிவு என 3 பிரிவுகளில் 4000-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இந்தநிலையில் தண்டனை பிரிவில் பழைய காகிதங்களை அரைத்து அட்டை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென புகை வந்தது. உடனே சிறைத்துறை தரப்பில் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் சென்று தீயை அணைக்கும் பணியில்ஈடுபட்டனர். புகை வந்த இடத்தில் தண்ணீரை பீச்சியடித்தும், தீ பரவாமலும் துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன் சிறைத்துறை சார்பில் பழைய காகிதங்களில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அந்த தீ முழுமையாக அணையாமல் இன்று மீண்டும் எரிந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கைதிகளை பற்றிய சில ஆவணங்கள் எரிந்திருக்கக்கூடும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பாதிப்புகள் குறித்த ஆய்வுக்கு பின்னரே முழு தகவல் தெரியவரும் என கூறப்படுகிறது.

Latest news