Tuesday, June 17, 2025

கோடிக்கணக்கில் பணம் இருந்தும் ஒரு சதுரடி இடம் கூட வாங்க முடியாத  நாடு தெரியுமா?

உலகத்தில் இருக்கும் மிகச் சிறிய, ஆனால் மிகவும் விலையுயர்ந்த நாடுகளில் ஒன்று தான் மொனாக்கோ (Monaco). பிரான்சின் தெற்குப் பகுதியில், மத்தியதரைக் கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த நாடு, அதன் அழகான சுற்றுப்புறம் மற்றும் பணக்கார வாழ்க்கைமுறைக்காக புகழ்பெற்றது.

மொனாக்கோவின் பரப்பளவு வெறும் 2.02 சதுர கிலோமீட்டர் தான். ஆனால், இங்கு வசிக்கும் மக்கள் தொகை சுமார் 36,000. அதில் பெரும்பாலும் மில்லியனர்கள், செழிப்பான தொழிலதிபர்கள், மற்றும் பிரபலங்கள் தான் இருப்பார்கள்.

மொனாக்கோவின் முக்கிய வருமானம் கேசினோ தொழில், சுற்றுலா, வங்கி சேவைகள், மற்றும் வரிவிலக்கு நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நாடு வரிவிலக்கு நாடு என்பதாலும், உலகம் முழுக்க இருந்து பணக்காரர்கள் இங்கு குடியேற விரும்புகிறார்கள்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால்,  அங்கு வீடு வாங்குவதற்கு  இடமே இல்லை… சிறிய பரப்பளவிற்கு அதிக மக்கள், அதிகமான தேவைகள் – இதனால், மொனாக்கோவில் ஒரு சின்ன அபார்ட்மெண்ட் வாங்கவே கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும். உதாரணமாக, ஒரு சதுர அடி நிலத்தின் விலை உலகில் எங்குமே இல்லாத அளவுக்கு இங்கு உயர்ந்துள்ளது.

2025 ஆம் ஆண்டில், மொனாக்கோவில் நிலத்தின் சராசரி விலை சதுர மீட்டருக்கு €51,967 யூரோ ஆகும் …இந்திய மதிப்பில் சுமார் ₹45,00,000ஆக உள்ளது. இந்த விலை கடந்த 10 ஆண்டுகளில் 44.3% உயர்ந்துள்ளது.

அங்குள்ள லார்வோட்டோ (Larvotto) என்னும் பகுதியில், நிலத்தின் விலை சதுர மீட்டருக்கு €97,563 யூரோ ஆகும் . இந்திய மதிப்பில் சுமார் ₹85,00,000 ஆக உள்ளது. இந்த விலை, உலகின் மிக உயர்ந்த நிலவிலைகளில் ஒன்றாகும்.

மேலும், மாரெட்டெரா (Mareterra) என்ற புதிய கடற்கரைப் பகுதி, நிலவிலைகளில் மேலும் உயர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில், நிலத்தின் விலை சதுர மீட்டருக்கு €80,000 யூரோ முதல் €120,000 யூரோ வரை உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹70,00,000 முதல் ₹1,05,00,000 வரை ஆகும்.

அதனால்தான் அந்த நாட்டை  –“பணம் இருந்தாலும் வீடு இல்லாத நாடு” என்று கூறுகிறார்கள்.

இந்த நாட்டில் வீடு வாங்குவது என்பது மிகச் சிறிய குழுவினருக்கே சாத்தியம். சாதாரண மக்கள் கற்பனைக்கே செல்ல முடியாத வாழ்க்கைமுறையை இங்கு சிலர் அனுபவிக்கிறார்கள்.

இந்த சிறிய நாட்டின் வாழ்க்கை, உலகத்தின் பெரும்பாலான பகுதிகளையே வியப்பூட்டும்  வகையில் இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news