தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திராவிட மாடல் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நிகரான தகுதியான பெயர் சொல்லக்கூடிய தலைவர்கள் தமிழகத்தில் இல்லை. மாறாக தமிழ் தமிழ் எனக் கூறிக்கொண்டு தமிழையும் தமிழர்களையும் கொச்சைப்படுத்தக்கூடிய, பெரியாரை இழிவுபடுத்தக்கூடிய சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
தமிழகத்திற்கு பொழுதுபோக்கிற்காக ஒரு ஆளுநர் இருந்து வருகிறார் அவர் ஆளுநராக இல்லை அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். சட்டமன்றத்திற்கு வருகை தந்து பாதியில் செல்வதற்கு அவர் வீட்டிலிருந்தே லீவு லெட்டரை முதல்வரிடம் கொடுத்து விடலாம் எனவும், அந்த வகையில் ஆளுநர் பதவி குறிப்பு என்னவென்றே தெரியாமல் அவர் செயல்படுவதாக கிண்டலாக கூறினார்.
மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்வதற்கு எந்தவித நிதியை ஒன்றிய அரசு கொடுக்காமல் தமிழ் மொழியையும் தமிழக மக்களுக்கும் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற ஒன்றிய அரசுக்கும் அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகின்ற கட்சியினரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழலில் திமுக உள்ளதாக ஆவேசமாக பேசினார்.