நான்கே நாளில் விவாகரத்து

288
Advertisement

தோழியையே திருமணம் செய்துகொண்ட பெண்ணைப் பார்த்திருக்கிறோம். தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்ணையும் பார்த்திருக்கிறோம். ஆனால், உணவு சமைக்கப் பயன்படும் ரைஸ் குக்கரைத் திருமணம் செய்துகொண்ட இளைஞர் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறார்.

இப்படியொரு திருமணம் நடக்குமா என ஆச்சரியப்பட்டு வாயை மூடுவதற்குள், நான்கே நாளில் விவாகரத்து செய்து மேலும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் டிரெண்டான இந்த விசித்திரமான நிகழ்வை சற்றுத் திரும்பிப் பார்ப்போமா?

இந்தோனேஷியா நாட்டின் மேகாலாங் நகரில் வசித்து வருபவர் கொய்ருல் அனம். பத்திக் கலைஞரான இவருக்கு ஒரு விநோதமான எண்ணம் உதித்துள்ளது. அதாவது, பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்குப் பதிலாக ரைஸ் குக்கரைத் திருமணம் செய்தார். அந்தத் திருமணத்துக்கு சமூக அங்கீகாரம் கிடைத்ததோ இல்லையோ சட்ட அங்கீகாரம் கிடைக்க வழிசெய்தார்.

குக்கரைத் திருமணம் செய்துகொண்டது பற்றித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”நான் சொல்வதையெல்லாம் குக்கர் கேட்கிறது. என்னிடம் அன்பாக இருக்கிறது. எனக்கு நன்றாக சமைத்துத் தருகிறது” என்றெல்லாம் வியாக்யானமாகக் கூறியிருந்தார்.

ஆனால், நான்கே நாளில் தன் புது மனைவியைத் தவிக்கவிட்டுள்ளார் கொய்ருல்.

”எனக்கு சோறு மட்டுந்தான் வேகவைத்துத் தருகிறது. அதனால் ரைஸ் குக்கரை விவாகரத்து செய்கிறேன்” என்றுகூறி புது மனைவிக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ எனத் திருமண வாழ்வைப் பற்றிப் பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், அந்தளவுக்குக்கூட இந்தத் திருமணப் பந்தம் நீடிக்கவில்லையே….

பப்ளிசிட்டிக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்….

எல்லாம் சோஷியல் மீடியாவுக்கே வெளிச்சம்.