ஈரோட்டில் தேர்தல் விதிகளை மீறி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக மேடை அமைத்து பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் விதிகளை மீறி மேடை அமைத்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பரப்புரை கூட்டத்தை தொடர்ந்து நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன் அறிவுறுத்தியும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சீமான் மீது ஐந்து வழக்குகளும் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.