இயக்குநர் பாரதிராஜா காலமானார்…

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா, ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கிராமத்து வாழ்க்கையையும் இயல்பான மனித உணர்வுகளையும் திரையில் அழகாகப் பதிவு செய்த அவர், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கினார்.

‘கிழக்கே போகும் ரெயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். மேலும் ராதிகா, ராதா, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கே சொந்தம். இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் தனுஷின் தாத்தாவாக நடித்த அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையில், அவரது ஒரே மகனும் நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவின் மறைவு அவரை மிகவும் மனவேதனைக்குள்ளாக்கியது. மகனின் இழப்பிலிருந்து முழுமையாக மீள முடியாமல் இருந்த நிலையில், அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், பின்னர் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மீண்டும் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி 84 வயதில் பாரதிராஜா காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவையடுத்து திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Related News

Latest News