சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாக வேண்டிய ‘கருப்பு’ திரைப்படத்தின் முதல் காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மாதக் காத்திருப்புக்குப் பிறகு, இன்று காலை 9 மணி காட்சியைக் காண ஆவலோடு திரையரங்குகளுக்குச் சென்ற ரசிகர்களுக்கு, ‘ஷோ கிடையாது’ என்ற செய்தி பேரிடியாக இறங்கியுள்ளது.
தமிழக அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்திருந்த நிலையிலும், கடைசி நேரத்தில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது பல்வேறு சந்தேகங்களையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது. இந்தத் திடீர் ரத்து குறித்துப் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமூக வலைத்தளம் வாயிலாகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
தவிர்க்க முடியாத காரணங்களால் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், இதற்காகத் தார்மீக ரீதியாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதன் பின்னணியில் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்பது குறித்து விநியோகஸ்தர் விஷ்ணு கமல் தற்போது விளக்கமளித்துள்ளார். தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான சிக்கல்களே இந்தப் படத்தின் காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட முதன்மைக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காலை 9 மணி காட்சிகள் மட்டுமல்லாமல், அதனைத் தொடர்ந்து நடைபெற வேண்டிய 12 மணி மற்றும் மதியக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு, நள்ளிரவு முதலே பணத்தைத் திரும்ப வழங்கும் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைவருக்கும் ரீஃபண்ட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீஸ் ஆகும் நாளில், இவ்வளவு பெரிய நிதிச் சிக்கல் ஏற்பட்டு காட்சிகள் ரத்து செய்யப்படுவது சினிமா வட்டாரத்தில் ஒரு மோசமான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
அதே சமயம், சமூக வலைத்தளங்களில் த்ரிஷா மற்றும் விஜய் தொடர்பாகப் பரவி வரும் சில சர்ச்சைக்குரிய வதந்திகளுக்கும், இந்த ரிலீஸ் சிக்கலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் இணையவாசிகள் விவாதித்து வருகின்றனர். இருப்பினும், தயாரிப்பு தரப்போ இது முழுக்க முழுக்கப் பொருளாதார ரீதியான பிரச்சனை மட்டுமே என்று கூறி வருகிறது. தற்போது நிலவும் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, இன்று மாலைக் காட்சிகளில் இருந்து படம் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா கூட்டணியைப் பார்க்கக் காத்திருந்த ரசிகர்களுக்கு, இன்றைய காலைப் பொழுது ஏமாற்றத்தில் முடிந்திருந்தாலும், மாலைக்குள் படம் வெளியாகும் என்ற நம்பிக்கையில் அவர்கள் காத்திருக்கின்றனர்.
