குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த விவசாயியின்
19 வயது மகள் வணிக விமானங்களில் பைலட் ஆகி சாதனை படைத்துள்ளார்.
பைலட்டுக்கான 18 மாதப் பயிற்சித் திட்டத்தை அமெரிக்காவில்
பதினோறே மாதங்களில் நிறைவுசெய்து மகத்தான பெருமைக்குச்
சொந்தமாகியுள்ளார் மைத்ரி பட்டேல் என்னும் அந்த இளம்பெண்.
8 வயதாகும்போது முதன்முதலில் விமானத்தைப் பார்த்த மைத்ரி
அப்போதே தான் ஒரு விமானி ஆக வேண்டுமென்று முடிவுசெய்துவிட்டாராம்.
மைத்ரியின் தந்தை காந்திலால் படேல் விவசாயம் செய்துவருகிறார்.
தாய் சூரத் மாநகராட்சியில் சுகாதாரத் துறை ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார்.
காந்திலால் பட்டேல் தனது மகளின் கனவை நிறைவேற்ற நன்கு
ஊக்கமளித்து வந்துள்ளார். தனது மகளுக்குத் தரமான கல்வி
கிடைப்பதற்காகத் தனியார் பள்ளியில் சேர்த்த காந்திலால் பட்டேல்,
மகள் பைலட் பயிற்சி பெறுவதற்காகத் தனது மூதாதையர் நிலத்தின்
ஒரு பகுதியை விற்றுக் கட்டணம் செலுத்தியுள்ளார்.
இந்த இளம் சாதனையாளரான மைத்ரியை குஜராத் முதலமைச்சர்
நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.
கமர்சியல் ஃபிளைட்டின் இளம்விமானியாகும் இந்த சாதனைப்
பெண்ணைப் பற்றிய தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.