உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஜூன் 11 தொடங்கி 15 வரை உலகப்புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, டெம்பா பவுமாவின் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இதற்காக இரு அணிகளும் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் ஆஸ்திரேலிய அணியை, லார்ட்ஸ் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள விடாமல், இந்திய அணி தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக தற்போது இந்திய அணி இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது.
ஜூலை 10ம் தேதி தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டி தான் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. விசித்திரமாக இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில், தற்போதே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நியாயமாக ஆஸ்திரேலிய அணி தான் அந்த மைதானத்தில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் இந்திய அணி முந்திரிக்கொட்டை தனமாக, இப்போதே அங்கு சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் 3 மணி நேரம் பயணம் செய்து, வேறொரு மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு உள்ளனர். ICC தலைவராக இந்தியாவின் ஜெய்ஷா இருப்பது தான் இதற்கு முக்கிய காரணமாகும்.
இதைப்பார்த்த இங்கிலாந்து ஊடகங்கள், ” இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது,” என்று செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2023ம் ஆண்டு ICCயின் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்தியது.
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ரோஹித் சர்மாவின் இந்திய அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கையில் ஏந்தியது. அன்றில் இருந்து இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மத்தியில், ஒரு மறைமுக பனிப்போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.