கரூர் புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்…

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கரூரில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். கடந்த ஆண்டு கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 32 பேரின் குடும்பத்தினருக்கு அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அரசு பணி நியமன ஆணைகளை அவர் வழங்குகிறார். இதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் ஆதரவு உறுதிப்படுத்தப்படுகிறது.

சென்னையில் உள்ள நீலாங்கரை இல்லத்திலிருந்து விமான நிலையம் சென்ற முதலமைச்சர், தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை வழியாக கரூரை அடைகிறார். மதியம் 12.45 மணிக்கு கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் உரையாற்றுகிறார். பின்னர் அட்லஸ் கலையரங்கம் முதல் அரசு சுற்றுலா மாளிகை வரை ரோடு-ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறார்.

பிற்பகல் 3 மணிக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தின் மணவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி செய்யும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சுமார் 5,000 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடாக 10 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை ஓரங்களில் இரும்புத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Related News

Latest News