பிஸ்கட் சாப்பிடும் ஆமை

562
Advertisement

மீன்களுக்கு பொரிபோன்ற உணவளிப்பதுபோல், நீர்நிலையிலுள்ள ஆமைகளுக்கு ஒருவர் பிஸ்கட் ஊட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நம் நாட்டில் மீன்களுக்குப் பொரியை உணவாக அளிக்கும் வழக்கம் உள்ளது. பொரியை நீரின்மேல் போட்டதும் மீன்கள் கூட்டமாக வந்து அவற்றை உண்டுவிட்டு ஆழ்நிலைக்குச் சென்றுவிடும். அதைப்போல, ஆமைகளும் ஒருவர் தரும் பிஸ்கட்டுகளை உண்பதற்காக ஏரியின் கரையிலுள்ள படித்தரைக்கு வந்து அதனைப் பெற்று உண்டுசெல்லும் காட்சி நன்கு ரசிக்க வைக்கிறது.

படித்தரையில் ஒருவர் பையில் பிஸ்கட்டுகளோடு உட்கார்ந்திருக்கிறார். அவற்றை நீர்நிலைக்கு வரும் பறவைகளுக்கு அளிக்கிறார். அதைக் கவனித்த ஏரியில் வசிக்கும் ஆமைகள் கூட்டமாக உற்சாகத்தோடு அவரை நோக்கி வருகின்றன.

படித்தரை அருகே வந்து தலையை மட்டும் நீருக்கு வெளியே உயர்த்த, அவரும் பிஸ்கட்டைப் பிய்த்துத் தருகிறார். பிஸ்கட்டை வாயில் இடுகிறார். பிஸ்கட்டை உண்ட ஆமைகள் தண்ணீருக்குள் சென்றுவிடுகின்றன.

அப்போது வேறுசில ஆமைகளும் பிஸ்கட்டுக்காகக் காத்திருக்கின்றன. அதேசமயம் பறவைகளுக்கும் அவர் பிஸ்கட் தருகிறார். பறவைகளுக்குப் பிஸ்கட் தரும்வரை ஆமைகள் பொறுமையாக இருந்து தலையை மட்டும் நீருக்கு வெளியே நீட்டி பிஸ்கட்டைப் பெற்றுக்கொள்கின்றன.

சில ஆமைகள் நீர்நிலைக்கு வெளியே அவர் அருகே வந்து பிஸ்கட்டைப் பெற்றுக்கொண்டு ஏரிக்குள் திரும்பிவிடுகின்றன. இந்தக் காட்சிகள் மிகவும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகின்றன.

ஆமை ஓர் அழகான உயிரினம். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் சிலபேர் ஆமையை செல்லப்பிராணியாக வளர்த்துவருகின்றனர். ஆமைகள் மனிதர்களைப்போல பகலில் சுறுசுறுப்பாகவும் இரவில் நல்ல உறக்கத்தையும் மேற்கொள்கின்றன.

ஆமைகள் பெரும்பாலும் தனிமையாக இருக்க விரும்பும். ஆனால், எவ்விதப் பயமும் தயக்கமும் இன்றி, ஆமைகள் மனிதனை நோக்கி வந்து ஒருவர் தரும் பிஸ்கட்டுகளைப் பெற்றுச்செல்வது வியக்க வைக்கிறது.

ஆமையின் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் உணவைப் பொருத்தே அமைகிறது. இந்த உலகில் ஆமைகள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆமைகளின் பெரும்பாலான உணவாக தாவர உணவுகளே உள்ளன. தினசரி உணவில் 80 சதவிகித அளவுக்கு அனைத்து வகைக் கீரைகளே இடம்பெறுகின்றன. அவற்றையே ஆமைகள் விரும்பி உண்பதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள 20 சதவிகித உணவில் பழங்கள், காய்கறிகள், வைட்டமின், தாதுப் பொருட்கள் உள்ளிட்ட உணவுகள் இடம்பெறுகின்றன.

நன்கு வளர்ந்த ஆமைகள் பொதுவாக நீர்வாழ் தாவரங்களை உண்கின்றன. சிறிய பூச்சிகள், நத்தைகள், புழுக்கள் போன்றவற்றையும் உண்கின்றன. மேலும், இறந்த கடல் விலங்குகளையும் உண்பதாகக் கூறப்படுகிறது. நன்னீரில் வாழும் ஊமைகள் சிறிய மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களையும் உண்கின்றன.

ஆனால்,மனிதர் அன்போடு தரும் பிஸ்கட்டை நட்போடு பெற்று உண்ணும் ஆமையின் செயல் வலைத்தளவாசிகளை வியக்க வைக்கிறது.

ஆமைக்குப் பகல் நேரத்தில் உணவளிப்பது சிறந்ததாகக் கருதப்படுகிறது. நிலத்தில் வாழும் ஆமைக்கு இரண்டு நாளைக்கொருமுறை உணவளிக்க வேண்டும்.