காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மாதம் 20-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. 117 இடங்களை கொண்ட இந்த மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.இந்த தேர்தலில் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜனதா கூட்டணி என 4 முனை போட்டி நிலவியது.மாநிலத்தில் பெரும்பான்மை பெறுவதற்கு 59 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில், 92 இடங்களை பெற்றிருப்பதன் மூலம் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றது.
பஞ்சாப்பில் அபார வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, முதல் முறையாக நாட்டின் தலைநகருக்கு வெளியே ஆட்சியமைக்க உள்ளது.பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் முதல்-மந்திரி வேட்பாளராக பகவந்த் மான் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தார். அதன்படி விரைவில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூடி அவரை முதல்-மந்திரியாக முறைப்படி தேர்வு செய்கிறார்கள்.
இந்நிலையில் பஞ்சாப் முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள பகவந்த் மான், சண்டிகரில் உள்ள ராஜ்பவனில், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.