Saturday, February 15, 2025

பெண்ணின் வயிற்றில் பேண்டேஜை வைத்து தைத்த வழக்கு : இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் பிரீத்தி. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கர்ப்பிணியாக இருந்த போது திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஆண் குழந்தை பெற்றெடுத்தார். அறுவை சிகிச்சை முறையில் பிரீத்தி குழந்தை பெற்றெடுத்த நிலையில், சிகிச்சைக்கு பின் தையல் போடப்பட்ட இடத்தில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனையில், வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதனையடுத்து, கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கு எதிராக சென்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிரீத்தி, இழப்பீடாக 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், சிகிச்சையின் போது கவனக்குறைவாக இருந்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை கட்டணம் 3 லட்சம் ரூபாயுடன், வழக்குச் செலவு 10 ஆயிரத்தையும் சேர்த்து, 13 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயை இரண்டு மாதங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Latest news