கூகுள் வாலட் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு மிக முக்கியமான மற்றும் பயனுள்ள தகவலை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை விமான டிக்கெட்டுகள், போர்டிங் பாஸ்கள் மற்றும் டிக்கெட்டுகளை மட்டும் சேமித்து வைத்து வந்த கூகுள் வாலட் செயலியில், இனி இந்தியர்கள் தங்களின் ஆதார் கார்டையும் டிஜிட்டல் முறையில் இணைத்துக் கொள்ளலாம். யு.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) நிறுவனத்துடன் இணைந்து இந்த வசதியை கூகுள் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இனி நீங்கள் பிசிக்கல் ஆதார் கார்டை எப்போதுமே கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த புதிய வசதியின் மூலம், அடையாளச் சான்று மற்றும் வயது சரிபார்ப்புக்கு பிடிஎஃப் (PDF) கோப்புகளை மற்றவர்களுக்கு அனுப்புவது தவிர்க்கப்படுகிறது. இதனால் அடையாளத் திருட்டு அல்லது தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் பெருமளவு குறைகிறது. பிவிஆர் (PVR) போன்ற திரையரங்குகளில் வயது சரிபார்ப்புக்கும், மேட்ரிமோனி தளங்கள் மற்றும் விசா விண்ணப்பங்களுக்கும் இந்த டிஜிட்டல் ஆதாரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது. அதேசமயம், இது பிசிக்கல் ஆதார் கார்டுக்கு மாற்றானது அல்ல என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதை எப்படி உங்கள் கூகுள் வாலட்டில் சேர்ப்பது என்பதற்கான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம். முதல் வழி, உங்கள் மொபைலில் உள்ள ‘ஆதார்’ (Aadhaar App) செயலியைத் திறந்து, உங்களுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி லாகின் செய்யவும். உள்நுழைந்த பிறகு, ‘Add to Wallet’ என்ற பட்டனை அழுத்தி, அதில் ‘Google Wallet’ என்பதைத் தேர்வு செய்யவும். அடுத்துத் திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் ஆதார் கார்டு தானாகவே கூகுள் வாலட்டில் இணைந்துவிடும்.
இரண்டாவது வழி, நேரடியாக கூகுள் வாலட் செயலியைத் திறந்து, அதன் கீழ் வலது மூலையில் உள்ள பிளஸ் (+) குறியீட்டை அழுத்தவும். அதில் ‘Aadhaar’ என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்தால், அது உங்களை ஆதார் செயலிக்கு அழைத்துச் செல்லும். அங்கு ஏற்கனவே சொன்ன அதே வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் எளிதாக ஆதாரைச் சேர்த்துக்கொள்ளலாம். தொழில்நுட்பத்தின் இந்த வளர்ச்சி, இனி ஆவணங்களைச் சுமந்து செல்வதில் உள்ள சிரமங்களைக் குறைப்பதோடு, பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உங்களுடைய மொபைலில் இந்த வசதியை உடனே முயற்சி செய்து பாருங்கள்.
