பிறப்பு, இறப்பு சான்றிதழ் எடுக்கப் போறீங்களா? இனி கோர்ட்டுக்குப் போகணும்!!

பிறப்பு அல்லது இறப்பு சான்றிதழ் இனிமேல் நினைத்த நேரத்தில் எளிதாகக் கிடைத்துவிடும் என்று நினைத்தால் அது ரொம்பவே தவறு! அக்டோபர் முதல் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள ஒரு புதிய சட்டம், தாமதமாகச் சான்றிதழ் வாங்குபவர்களுக்குப் பெரும் அலைச்சலைக் கொடுக்கப் போகிறது. அதைப் பற்றிய முழுமையான விவரங்களை இப்போது பார்ப்போம்.

குழந்தை பிறந்தாலோ அல்லது குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டாலோ, அதைச் சரியான காலக்கெடுவுக்குள் அரசுப் பதிவில் சேர்ப்பது ரொம்பவே முக்கியம். பள்ளிச் சேர்க்கை, ஆதார் அட்டை, சொத்து ஆவணங்கள் மற்றும் வாரிசு சான்றிதழ் என எல்லாவற்றுக்கும் இந்தச் சான்றிதழ்கள் இன்றியமையாதவை.

வழக்கம்போல, சம்பவம் நடந்து இருபத்தி ஒரு நாட்களுக்குள் பதிவு செய்தால், உள்ளாட்சி அலுவலகங்களிலேயே வழக்கம் போல் எளிதாகச் சான்றிதழைப் பெற்றுவிடலாம். இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆனால், பதிவு செய்வதில் தாமதமாகி, ஒரு வருடத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் சான்றிதழ் பெற முயன்றால் நிலைமை இப்போது முழுமையாக மாறியுள்ளது.

இனிமேல் இதற்கு மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயல்முறை மாஜிஸ்திரேட்டிடம் முறையாக அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும்.

அவர்கள் முழுமையாக விசாரித்து கொடுக்கப்பட்ட தகவல்கள் உண்மையானதுதானா என்பதை உறுதி செய்த பிறகே சான்றிதழைப் பதிவு செய்ய அனுமதி வழங்குவார்கள்.

ஒருவேளை இந்தத் தாமதம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போய்விட்டால், அதிகாரிகளிடம் விண்ணப்பிப்பதுடன் மட்டும் வேலை முடிந்துவிடாது.

நேராக முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்குச் சென்று, அங்கிருந்து முறையான உத்தரவைப் பெற்றால் மட்டுமே இனிப் பிறப்பு அல்லது இறப்பைப் பதிவு செய்ய முடியும்.

போலியான பதிவுகளைத் தடுத்து, பொதுமக்கள் சரியான நேரத்தில் அரசிடம் தகவல்களைப் பதிவு செய்வதை ஊக்குவிக்கவே மத்திய அரசு இந்த அதிரடித் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.

அதனால், தேவையில்லாத சட்டச் சிக்கல்களையும் அலைச்சலையும் தவிர்க்க இனிமேல் காலத்தே பதிவு செய்வதுதான் புத்திசாலித்தனம்.

Related News

Latest News