தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஷால், ” முதல்வர் விஜய்க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! அன்பிற்குரிய முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே, 717 மதுக்கடைகளை, குறிப்பாக பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளை மூடுவதாக நீங்கள் அறிவித்ததற்கு மிக்க நன்றி. எப்பேர்ப்பட்ட ஒரு சிறப்பான நடவடிக்கை இது! எத்தனையோ பெண் பிள்ளைகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம் ஆர்.கே. நகரில் நடந்தது. அங்கு ஒரு மாணவி, தினமும் மதுக்கடையைக் கடந்துதான் வீட்டிற்குச் செல்ல வேண்டியிருப்பதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் குறை கூறியிருந்தார்.
அவரும், அவரைப் போன்ற எண்ணற்ற பொதுமக்களும் உங்களையும், உங்களின் இந்த முடிவையும் மனதாரப் பாராட்டுவார்கள். நமது முதல்வரின் இந்த முடிவின் மூலம், ‘மது’ எனும் இந்தத் தீமையிலிருந்து நிரந்தர விடுதலை கிடைத்துள்ளது. இதனால் என்னையும் சேர்த்து, பலருடைய முகங்களிலும் மகிழ்ச்சிப் புன்னகை தவழ்கிறது. அன்பிற்குரிய விஜய் அவர்களே, இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்! இன்றும், என்றும் உங்களுக்கும், உங்கள் அரசுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்”, என பாராட்டி இருக்கிறார்.
