இந்தியாவிலேயே பணக்காரரான அதானி, தனது தந்தையின் 100வது பிறந்தநாளையும், தன் 60வது பிறந்தநாளையும் முன்னிட்டு 60,000 கோடி வரை பல்வேறு சமூக பணிகளுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
20 வயதில் கல்லூரி படிப்பை விட்டுவிட்டு வைர வியாபாரத்தில் இறங்கிய அதானி, முதல் வருடத்திலேயே ஒரு மில்லியனை ஈட்டினார்.
டெல்லியில் அதானி ஹவுஸ் என்ற 400 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரர் அதானி. 6000 கோடி டீலை 100 மணி நேரத்தில் முடித்தது மற்றும் இந்தியாவிலேயே பெரிய தனியார் துறைமுகத்துக்கு உரிமையாளர் போன்ற அடுக்கடுக்கான சாதனைகள் அதானி வசம் இருந்தாலும், இது எவ்வாறு சாத்தியமானது என்ற கேள்வி மக்கள் மத்தியில் நிலவவே செய்கிறது.
உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பில் பாதி அளவு சொத்து இருப்பு வைத்துள்ள அதானி, அம்பானியை விட 10 பில்லியன் அதிக சொத்துக்களை பெற்றுள்ளார்.
முந்திரா துறைமுகத்தின் மூலம் இந்தியாவின் 24 சதவீத துறைமுக வர்த்தகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதானியின் அசுர வளர்ச்சிக்கு ஆளும் கட்சியின் ஆதரவே முக்கிய காரணம் என பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
2018இல் விமான நிலையங்களை தனியார் மையமாக்க, மாற்றப்பட்ட புதிய விதிமுறைகளுக்கு பின் ஆறு விமான நிலையங்களுக்கு உரிமையாளரானார் அதானி.
2003இல் நடைபெற்ற குஜராத் கலவரங்களுக்கு பின் மோடிக்கு தளராத ஆதரவை அளித்த அதானிக்கு, மோடி பிரதமரான பின் பெருமளவு பலன்களும் சலுகைகளும் கிடைக்கவே செய்தன.
கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகும் வர்த்தக சந்தையில் சற்றும் வேகம் குறையாமல், பயணித்து வரும் அதானிக்கு தற்போது உள்ள கடன் தொகை 2.21 லட்சம் கோடி ஆகும். இந்த கடன், அதானியின் ஆண்டு வருவாயை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, இலங்கையில் அதானியின் மின்துறை தொடர்பான project ஒன்றிற்கு, இந்திய அரசு பரிந்துரை செய்திருப்பதாக வெளியான ஆவணம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் வளர்ச்சிக்காக அரசின் தலையீடு எதற்கு நடந்தது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.